வியாழன், 30 டிசம்பர், 2010

சீதை செஞ்ச லிங்கம் (ராமேஸ்வரம்)

ராமேஸ்வரம்

ஒரு அதிகாலை வேளையில் ராமேஸ்வரம் வந்திறங்கினேன். எல்லா நேரங்களிலும், மக்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் லாட்ஜுகள், விதவிதமான பெயர்களில், விதவிதமான வசதிகளுடன். வட இந்தியர்கள் அதிகம் வரும் இடமென்பதால், அந்தந்த மாநிலத்தவர்கள் நடத்தும் விடுதிகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம். கடவுள் இருக்கிறார், கடல் இருக்கிறது என்று வெளிப்புறத்திலேயே உறங்குபவர்களும் உண்டு.



ராமேஸ்வரம் ஒரு தனித்தீவு. சாலை வசதி, ரயில் வசதி இரண்டுமே இருப்பதால், அந்த எண்ணம் ஏற்படுவதில்லை. இந்த ஊர் சொல்லும் புராணக்கதை சூப்பரானது. பேமஸானது. சர்ச்சைக்குள்ளானது. அதாவது ராமர் இங்கிருந்து தான் இலங்கைக்கு சென்று ராவணனுடன் போரிட்டு, சீதை மீட்டு வந்தார். அதற்காக, அவர் இலங்கைக்கு அமைத்த பாலம் இங்கிருந்து தான். பாலம் கட்ட உதவிய அணிலை, பரிவுடன் தடவி கொடுக்க, அதன் முதுகில் ஏற்பட்ட மூன்று கோடுகளைப் பற்றி தெரிந்திருக்குமே? அந்த அணிலுக்கு சொந்த ஊர், இதுதான்.



போரில் ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் உண்டான தோஷத்தைக் கழிக்க, இங்கு ஒரு லிங்கத்தை அமைத்து, பூஜிக்க வேண்டிய அவசியம் ராமனுக்கு ஏற்பட்டது. இதற்காக லிங்கத்தை கொண்டு வர அனுமனை ராமர் அனுப்ப, அவர் திரும்பி வர நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில், தன் கையாலேயே கடற்கரை மண் கொண்டு ஒரு லிங்கத்தை சீதை உருவாக்க, அந்த லிங்கத்திற்கே பூஜை செய்தார். திரும்பி வந்த அனுமனுக்கு வருத்தம். 

நம்ம கொண்டு வந்த லிங்கத்தை கண்டுக்கொள்ளவில்லையே? என்று. இதனால், அவர் தன் மன வருத்தத்தை ராமனிடம் சொல்ல, ராமன் அந்த மண் லிங்கத்தை அசைத்து பார்க்க சொல்ல, அனுமன் அசைத்து பார்த்து முடியாமல் போக, சீதை உருவாக்கிய மண் லிங்கத்தின் அருமை புரிந்தது. அது தான் ராமேஸ்வர கோவிலில் இருக்கும் லிங்கமாம். அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பக்கத்தில் இருக்கிறது.

இந்த கதையை கோவிலில் பெரிய பெரிய வண்ணப்படங்களாக வரைந்து வைத்துள்ளார்கள். ஸ்பான்சர்களுடன் தான். இந்த மாதிரி கோவிலில் படம் வரைந்து கதை சொல்லும் உத்தி எனக்கு பிடித்த விஷயம்.



கோவில் முழுக்க, ஊர் முழுக்க வட இந்தியர்கள் தான். அதுவும், வந்திருந்த பெரும்பாலோர் வசதியானோர் அல்ல. கூட்ட கூட்டமாக சென்றனர். இங்கிருந்து தனுஷ்கோடிக்கு சொற்ப பஸ்களே ஓடுகிறது. இவர்களுடைய ஒரு கேங் ஏறினால், பஸ் நிறைந்து விடுகிறது. கண்டக்டர், செக்கிங் இன்ஸ்பெக்டர், தெருவோர விற்பனையாளர்கள் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். கண்டக்டர், வட இந்தியர்களை உதாரணம் காட்டி, நம்மவர்களை பஸ்ஸில் ஒழுங்காக நிற்க சொல்கிறார். இந்த ரூட் பஸ்ஸை கொஞ்சம் அதிகம் விடலாம். அட்லீஸ்ட், தேவையான நேரங்களில் இருக்கும் கூட்டத்திற்கேற்ப. கூட்டமாக இருக்கிறதே என்று ஒரு பஸ்ஸை விட்டுவிட்டு, அடுத்த பஸ்ஸிற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்!



தனுஷ்கோடி. நமக்கு சமீபத்தில் வந்த சுனாமி பற்றி தான் தெரியும். இதே போல், 1964 வருட டிசம்பரிலும் ஒரு சுனாமி தமிழகத்தை தாக்கியது. அதில் தாக்குண்டு வெறும் மண் மேடாகி போன ஊர் தான், தனுஷ்கோடி. இந்த அழிந்த ஊரை சுற்றி பார்க்க, ஜீப்கள் வாடகைக்கு கிடைக்கிறது. இங்கு ஒரு பாழடைந்த தேவாலயத்தைக் காணலாம். இந்த ஊர் போகும் வழியில், சாலையில் இரு பக்கமும் கடலை காணலாம்.



பாம்பன் பாலம் என்றாலே அதை கட்ட உதவிய சிமெண்ட் தான் பலர் நினைவுக்கு வரும். அவர்கள் தான் அந்த பாலத்தை விளம்பரம் மூலம் பிரபலம் செய்தவர்கள். சமீபத்தில் மும்பை கடலில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி பாலத்திற்கு, அன்னை இந்த இந்திரா காந்தி பாலம். பக்கத்திலேயே இருக்கும் ரயில் பாதை, பெரிய கப்பல்கள் செல்ல ஏதுவாக ஏற்றி இறக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் சென்றதால், இங்கு இறங்கி பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்தே எடுத்த போட்டோ.



இந்தியாவில் தரிசிக்க வேண்டிய 12 லிங்கங்களில், தமிழகத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் தான் அமைந்துள்ளது. மற்ற ஊர்களுக்கு போக முடிகிறதோ, இல்லையோ, பக்கத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு போயிட்டு வந்துடுங்க.

சேது சமுத்திர திட்டத்திற்காக, அது தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரும் என்று சொல்ல பட்ட தொழிற் வாய்ப்புக்களுக்காக, எப்போது ஆரம்பிக்கும், நிறைவு பெறும் என்று துவக்கத்தில் எதிர்ப்பார்த்திருந்தேன். பிறகு, அதனால் கடலின் சுற்றுசுழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சொல்லப்பட்டது. இன்னமும், அது பற்றிய உண்மை நிலை தெரியவில்லை. ஆனால், விஞ்ஞான ரீதியாக சொல்லப்படும் காரணங்களால் நிறுத்த முடியாமல் போன திட்டம், ராமர் பெயரை சொல்லி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, எல்லா அரசுகளுமே கடவுளுக்கு பயப்படுகிறது. அட்லீஸ்ட், ஓட்டு வங்கி நம்பிக்கைக்காக.

நன்றி
சரவணகுமரன் குமரன் குடில் http://www.saravanakumaran.com/2010/05/blog-post_5860.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக