வியாழன், 26 மே, 2011

தடுமாறாதே..!! தடுமாறாதே..!!


மனமே... மனமே... தடுமாறும் மனமே. (1)

Wednesday, January 19, 2011

மனிதர்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே என்னென்ன காரணங்கள் உள்ளன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில் காரணங்கள் உள்ளன. நாம் நினைத்தே பார்க்காத ஒன்றால் நாம் தோல்வியை தழுவி இருப்போம். நமது வெற்றியை பறிக்கும் காரணங்களுள் ஒன்று தடுமாற்றங்கள்.

மனிதர்களை தடுமாற்றங்களே தடம் மாற செய்கிறது. சின்ன சின்ன தடுமாற்றங்கள் கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு நிலையிலும் தடுமாற்றமற்ற சிந்தனைகளே அவனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது. ஒவ்வொரு மனிதனும் தடுமாற்றமற்ற வாழ்க்கையை, சிந்தனையையே விரும்புகிறான். சீராக, எந்த வளைவுகளும், நெளிவுகளும் அற்ற, நான்கு வழிச்சாலையில் காற்றாக பறக்க விரும்பும் தடுமாற்றமற்ற பாதையை, பயணத்தையே விரும்புகிறான். ஆனால் கிடைத்ததா. நிச்சயம் ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான் அது.

ஏன் கிடைக்கவில்லை. எதற்கு கிடைக்கவில்லை. எல்லோருக்கும் கிடைக்காமல் போனதா அல்லது தன் ஒருவனுக்கு மட்டும் தான் கிடைக்காமல் போனதா. இம்மாதிரியான கேள்விகள் கூட, ஒருவனை தடுமாற்றத்திலிருந்து - விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய சக்தி பெற்றவையே. கேள்வி கேட்பது மனதுக்கு நல்லது. சிந்தனை வயப்பட்ட மனமே கேள்வி கேட்கும். சிந்திக்காத மனம், சோம்பி போய் கிடக்கும். எத்தனை அழகான மண்டபமும் சுத்தம் செய்யப் படாமல் போனால் அழுக்கடைந்து தானே போகும்.

ஓடும் நதியே அழகு. சிந்தித்து கொண்டிருக்கும் மனமே அறிவுக்கு மெருகூட்டும். அழகுக்கு அழகு சேர்க்கும். வெற்றிக்கு வெற்றி சேர்க்கும். கேள்விகள் தானே மனிதர்களை அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறது. ஆடைகள் இல்லாதவன் மட்டும் அரை மனிதன் அல்ல. கேள்வி கேட்காதவனும் அரை மனிதனே. தடுமாற்றம் என்பது என்ன.

அசலுக்கும், நகலுக்குமான வித்தியாசங்ளை தெளிவாக புரிந்து கொள்ளும் திறனற்று - அசலை நகலாகவும், நகலை அசலாகவும் காண விழைவதே தடுமாற்றங்கள். பேச வேண்டிய நேரத்தில் மௌனமாக இருப்பதும், மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் பேசுவதும் கூட தடுமாற்றத்தின் விளைவுகளே. சிரிக்க வேண்டிய நேரத்தில் அழுவதும், அழ வேண்டிய நேரத்தில் சிரிப்பதும் - மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்யக்கூடிய வேலையன்றி, வெற்றி பெற நினைப்பவர் செய்யக்கூடிய வேலை அல்லவே.

எந்த நேரத்தில் என்ன செய்வது என்று சரியாக யோசிக்கிற தன்மையே தடுமாற்றமற்ற சிந்தனை. "லேசா தான் தடுமாறினேன். கீழே விழுந்தேன். பெரிசா அடிபட்டுடுச்சு" என்கிறோம். லேசான தடுமாற்றம். பெரிதான காயம். இது கவனிக்கப்பட வேண்டியவை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இந்த தடுமாற்றம் உள்ளது.

வெற்றியை விரும்பாதவர் யார்... மகிழ்ச்சியை விரும்பாதவர் யார்... அமைதியை விரும்பாதவர் யார்... எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுகிறதா... கிடைக்காதது தான் பிரச்சனை. ஒருவருக்கு கிடைப்பது அடுத்தவருக்கு ஏன் கிடைப்பதில்லை. ஒருவனால் தடுமாற்றமற்று செய்யக்கூடியவைகளை, இன்னொரு நபரால் ஏன் செய்ய முடிவதில்லை. மனதை பக்குவப்படுத்துதலே அனைத்துக்கும் நிவாரணமாக உள்ளது.

ஒருவர் சொன்னார். "அவங்க கேள்வி கேட்கும் போது ஒரே தடுமாற்றம்மா இருந்தது. என்ன சொல்றதுன்னு தெரியல. ஏதோ சொல்லிட்டேன்"... கேள்விக்கு எல்லோரும் பதில் சொல்லலாம். சரியான பதில் சொல்பவரே வெற்றியாளர். சொல்லும் பதிலெல்லாம் சரியானவையாக இருந்துவிடாது. தடுமாற்றமற்ற சிந்தனையை அமைய பெறுவது என்பது கூட, அவரவருக்கு இயற்கை கொடுத்த வரம் தான். சரி. இயற்கையாக அமைய பெறாதவர் என்ன செய்யலாம்.

"அவரை போல் நான் இல்ல." என்று புலம்பும் நிறைய பேரை நாம் பார்த்து இருப்போம். அவரை போல் எப்படி நாம் இருக்க முடியும். அவர் மட்டுமே அவர் போல் இருப்பார். வீணாக புலம்பி கொண்டே இருந்தால் புலம்பி கொண்டே இருக்க வேண்டியது தான். நாம் நம்மைச்சுற்றி நிறைய பேரை பார்க்கலாம். "எதற்கெடுத்தாலும் புலம்புவோரை". அப்படி புலம்பி கொண்டே இருப்பதால் என்ன பயன். அவர்களால் சிறு துரும்பை கூட நகர்த்த இயலாது என்பதே உண்மை.

அதே நேரம் "அவரை போல் வெற்றி பெற்றவர்களாக நாம் இல்லை" என்று உணர்கிற சிந்தனை கூட இல்லாமல் இருப்பவர்களுக்கு நாம் மேல் தான். எதுவுமே சிந்திக்காமல் இருப்பவர்களுக்கு, ஏதோ ஒன்றை பற்றி சிந்திப்பவர் மேல் இல்லையா. அந்த ஏதோ ஒரு சிந்தனை நம்மை மேலே கொண்டு செல்லாதா. அதே நேரம் சிந்தனையில் இரண்டு வகை உள்ளது. ஒன்றை நாம் கவனித்தால் புரியும். உலகில் பல் வேறு அம்சங்கள் இரண்டு இரண்டாக அமையப் பெற்றவையே. நல்லதாக மற்றும் கெட்டதாக. நம் சிந்தனை எதனை வெளிப்படுத்துகிறது இறுதியாக என்பதே மிக முக்கியமானது.

ஆக்கப்பூர்வமான ஒன்றுக்கு எத்தனை சிந்திக்க வேண்டுமோ, அத்தனை சிந்தனை அழிதலுக்கும் உள்ளது. வெற்றிக்கு உழைக்கும் அதே உழைப்பை தான் தோல்விக்கும் உழைக்க வேண்டி உள்ளது என்பதை மறக்க கூடாது. "அவரை போல் நான் இல்லை. அவரை போல் வர நான் என்ன செய்ய வேண்டும்" என்கிற கேள்வி வந்தால் தான், அதற்கொரு பதில் கிடைக்கும். கேள்வி கேட்பதோடு முடிந்துவிடக்கூடாது நம் தேடல். தேடல் என்பதே கேள்விக்கு பதிலை பெறுவதாய் இருக்கவேண்டும்...

தேடுவோம்... பெறுவோம்... மகிழ்வோம்... என்பதாக. சரி பதில் என்ன. கற்று கொள்ளல் என்பது தான் பதில். சகலமும் இயற்கையாக அமையப் பெற்றவர், உலகில் சொற்பமானவர் தான். நீரின்றி அமையாது உலகு என்பதற்காக, மனிதர்கள் இயற்கையாக கிடைத்த நீராதாரங்களின் அருகிலேயே வாழ்ந்தார்களா. இல்லையே. ஒரு வேளை அப்படி வாழ நினைத்திருந்தால் வாழ்ந்திருக்க முடியுமா. அது சாத்தியமில்லையே. செயற்கையாக நீர்த்தேக்கங்களை உருவாக்கினான். எங்கும் வாழ முடியும் என்கிற நிலையை உருவாக்கினான். இது தான் செயற்கைக்கு கிடைத்த வெற்றி.

எல்லோருக்கும் அழகாக இருக்க ஆசை தான். ஆனால் இல்லையே. சிலரை தானே இயற்கை அழகோடு படைக்கிறது. அதற்காக அழகில்லாதவர்கள் "அய்யோ நான் அழகாக இல்லையே" என்று புலம்பி கொண்டிருப்பதால் என்ன நன்மை விளையும். இயற்கை சிலரை அறிவுள்ளவர்களாக, தனித்திறன் அமைய பெற்றவர்களாக படைத்துள்ளது. அதற்காக ஏனையோர் முட்டாள்களாக தான் வாழ வேண்டுமா என்ன. பயிற்சி என்ற ஒன்று உள்ளதே. இன்று எல்லாவற்றுக்கும் பயிற்சி வகுப்புகள் உள்ளது.

நீங்கள் நம்ப மாட்டீர்கள். "தொலைபேசியில் எப்படி பேசுவது என்பதற்கு கூட" பயிற்சி வகுப்புகள் உள்ளன. அது பணியிடங்களில் பேசுவதற்கான வகுப்புகள். என்றாலும் நடைமுறையில் பெரும்பாலோருக்கு அப்படி ஒரு வகுப்பு தேவையாக தான் உள்ளது. ஆக, முன்பே குறிப்பிட்டது போல் எங்கே எதை எப்படி பேசுவது என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள். சில வார்த்தைகளே போதும், ஒருவரை பற்றி அறிய. ஒரு கடைக்கு போகிறோம். நமது பேச்சை வைத்தே, நாம் பொருள் வாங்க கூடிய ரகமா இல்லையா என்பதை சேல்ஸ்மேன் உணர்ந்து விடுவார்.

ஒன்றுமே இல்லாத ஒன்றை பல நிமிஷங்கள் தொலைபேசியில் பேசுபவர்களை பார்க்கிறோம். சாதாரண சிறிய விஷயமான தொலைபேசியில் எப்படி பேச வேண்டும் என்பது கூட எல்லோருக்கும் தெரிவதில்லை என்பது கூட ஒரு கசப்பான உண்மையே. மனிதனின் தடுமாற்றமற்ற சிந்தனைக்கும், வெற்றிக்கும் தொலைபேசியில் பேசுவதற்கும் தொடர்பு உள்ளதா என்று கேட்கலாம். இருக்கிறது - மனிதர்களின் ஒவ்வொரு சிறு செயல்கள் கூட, வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்க கூடிய சக்தியை பெற்று இருக்கிறது.

நண்பர் ஒருவர் புது கைபேசி வாங்கினார். முதல் முதலாக கைபேசி வாங்குகிறார். நானும் அவருமாக தான் சென்று வாங்கினோம். வாங்கிய ஒரு மாதத்தில் "போன்ல ஏதோ கோளாறு இருக்கு" என்றார். நான் சொன்ன கடையில், நான் சொன்ன மாடல் வாங்கியதால் என்னிடம் வந்து காட்டினார். ஏதோ பழுது என்று தெரிந்தது. தற்செயலாக call duration ஐ பார்த்து அதிர்ந்து போனேன். "முப்பது நாளில் எழுபது மணி நேரம் பேசி இருந்தார்".

இத்தனைக்கும் அவர் கைபேசியை தொழில் நிமித்தம் பயன் படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய போன் என்று நம்ப முடியாத அளவுக்கு கைபேசி தன் வனப்பை இழந்திருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டேகால் மணி நேரம் வேலை நேரத்தில் பேசி பேசி - நேரத்தை, வேலையை வீணடித்து இருப்பதாக அறிய முடிந்தது. "போன் வந்ததுல இருந்து வேலையே ஓட மாட்டேங்குது" என்றார். தனது வேலையின் மீதான கவனமின்மைக்கு கைபேசியை குற்றம் சொன்னார்.

இவருக்கு எதிர்மறையாக இருப்போரையும் நாம் காணலாம். பணி நேரத்தில் தேவையில்லாமல் கைபேசியை தொடுவதே இல்லை என்கிற கொள்கையுடன் இருப்பவர்கள். நம்மில் நிறைய பேரை பார்க்கலாம். சரியான நேரத்தில் சார்ஜ் போட மறப்பவர்களை. உபயோகித்து கொண்டிருக்கும் ஒரு பொருளை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் ஒரு வித தடுமாற்றமே. பொதுவாக இப்படி சொல்வார்கள், "நிறைய பேசுபவர்கள்... குறைவாக சிந்திப்பார்கள். குறைவாகவே வேலை செய்வார்கள்" என்று. இது அனுபவப்பூர்வமான உண்மை.அதிக பேச்சு தரும் பலன் என்ன. "வேலையில் விஷயம் இல்ல. தொண தொணன்னு பேசுறதுக்கு தான் அவர் லாயக்கு" என்று முத்திரை குத்தப்படுவோம்.

வெற்றி பெற்ற மிக பெரிய ஆளுமைகளை பார்த்தாலே அது புரியும். எதற்கு உதாரணத்திற்கு வேறு யாரையோ சொல்ல வேண்டும். வெற்றி பெற்ற நீங்களே அவ்வாறாக தானே இருப்பீர்கள். ஆக, பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசுங்கள். தடுமாற்றமின்றி பேசுங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.


நன்றி 
தமிழ் உதயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக