ஞாயிறு, 28 நவம்பர், 2010

அன்பிலும்....,ஏழையின் சிரிப்பிலும்....,!!!

கடவுளும், நானும்



எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேர்ந்தது கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்ற அம்மாவின் அழைப்பு. தீவிர ஆத்திகனாக இல்லாத போதும் ஆலயங்களுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே உறுத்திக் கொண்டிருக்கும் நிகழ்வு. அங்கு செல்வதால் மன அமைதி கிடைக்கும் என்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. கோயிலின் திருவிழாக்காலத்தில் மட்டும் உடன் வர அழைப்பதால் நானும் செல்வது வழக்கமாகிவிட்டது. அம்மாவை கோவிலில் விட்டு விட்டு அங்கு இருக்கும் கடைத்தெருக்களில் சுற்றி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உள்ளே எனக்கான அர்ச்சனை நடந்து கொண்டிருக்கும்.



திருவிழா என்றுமே அழகானதுதான். கொளுத்தும் வெயில் காலத்தில் ரோட்டை மறைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் கீழே, கடந்து செல்லும்போது வீசும் சிலநொடி தென்றலுக்காகவே அவ்வழியில் செல்வதுண்டு. குடும்பம் சகிதமாக கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தருணங்கள் மக்களுக்கு வாய்ப்பது திருவிழாக் காலங்களில்தான்.

ஆனால் நமது பார்வையில் திருவிழா ஒரு வித்தியாசமான ஒன்றுதான். அலுவலகத்தின் அருகிலேயே கோயில் இருப்பதால் செல்லும் வழியில் திருவிழாக்கூட்டத்தின் கலர்களைப் பார்ப்பது காலைப்பணிகளில் ஒன்றாகி விட்டதால் அங்கு மட்டும் வண்டியின் வேகம் குறையும். ஆனால் உடன் வரும் உத்தமர்கள் கோயிலின் முன் வந்ததும் கையை விடுத்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்போது எதிர்பாராமல் எதிர்ப்படுபவர் மீது இடித்து விட்டால் அவ்வளவுதான். அவர்கள் பக்தியின் வீரியம் வாய் வழி வெளிப்பட்டு விடும்.

மஞ்சள் நீர் ஊற்ற வரிசையில் நிற்கும் போது 'எதற்காகவும் இவ்வளவு நேரம் நின்றதில்லை' என்பதுதான் என் பேச்சாக இருக்கும். முன் பின் நிற்கும் சில பெண்கள் கால் வலியினால் காலை மாற்றி மாற்றி ஒற்றைக்காலில் நிற்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வாங்கிக் கட்டியுமிருக்கிறேன்.


அன்றும் எப்போதும் போல, கட்டாயப்படுத்தி கோவிலினுள் அழைக்காமல் அவர் மட்டும் செல்ல திருவிழாக் கடைத்தெருவில் மெல்ல நுழைந்து சென்றுகொண்டிருந்தேன். அன்று வெயிலின் தாக்கம் மிகுவாய் ஓங்கியிருந்தது. ஆங்காங்கு குளிர்பானக் கடைகளும், பழக்கடைகளும் தென்பட்டாலும் மனது கரும்புச்சாறு அரைக்கும் கடையைத்தான் தேடியது. கரும்புச்சாறு குடிக்கும்போது ஏற்படும் உடலுக்கும் மனதுக்குமான குளிர்ச்சி வேறுவகையான குளிர்பானங்கள் தராது என்பது உண்மைதான். அலுவலகத்திலும் தேநீருக்குப் பதிலாக இதை வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஒரு தம்ளர் வாங்கிக் குடித்ததும் வெயில் சிறிது நேரம் கண்களுக்கு இதமாகத் தெரிந்தது.

வீட்டிற்கு வாங்கிச்செல்வதற்காக தீர்ந்து போன தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். மெதுவாய் கையை பிடித்து அண்ணா... அண்ணா... என்று ஒரு சிறுமி இழுத்துக் கொண்டிருந்தாள். முற்றிலுமாக பழுப்பேறிய தலைமுடியுடன், வியர்வையில் நனைந்திருந்தாள். ஒருவிதமான கரகரத்த குரலுடன் அவள் அழைத்த தொனியே மனதைக் குடைந்தெடுத்தது. கையிருக்கும் பத்தையைா இருபதையோ திணித்து விட்டு சென்றிருக்கலாம். ஏதோவொன்று தோன்ற கையில் வாங்கிய கரும்புச்சாற்றை அவளிடம் தந்து விட்டு நகர்ந்தேன்.

கோவிலுனுள்ளே சென்ற அம்மா திரும்பிவர, அவர்களுடன் கடைத்தெருவில் சுற்ற ஆரம்பிக்கும்வரை நினைவில் அகலாமலிருந்தது அந்த சிறுமியின் முகம். சிறுவனாய் நான் அடம்பிடித்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய கடைத்தெருவில் இன்று அவள் கடவுள் உருவம் பொறித்த கழுத்தணிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். எனக்கும் ஒன்று தர மெலிதாய் சிரித்து அணிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் செல்ல வண்டியை கிளப்பிய சமயம், சாலையோர சுற்றுச் சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாள் அச்சிறுமி. அவளைவிட வயதில் சிறிய குழந்தை ஒன்றிற்கு கரும்புச்சாற்றை ஊட்டிக்கொண்டிருந்தாள். குடிக்கும் போது, வெயிலில் கருத்த அக்குழந்தையின் கழுத்து வழி வழிந்து கொண்டிருந்தது கரும்புச்சாறு. 

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".








 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக