ஞாயிறு, 28 நவம்பர், 2010

பாண்டியனின் துறைமுகம் உய்யலாலா!!!

கொற்கை, பாண்டிய ராஜ்யத்தின் துறைமுக நகரம் என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாடப்புத்தகம் மூலம் படித்திருப்போம்.ஆனால் எத்தனை பேருக்கு அந்த ஊரின் தற்போதைய நிலை தெரியும்? கொற்கை, தற்போது ஒரு சிறிய கிராமம். நான் சிறு வயதில் இருந்து, பல முறை அந்த ஊருக்கு அருகே வரை சென்றிருக்கிறேன். ”கொற்கை - 3 கி.மீ.” என்று எழுதியிருக்கும் பலகையை பலமுறை கடந்தும், அந்த ஊருக்கு இதுவரை சென்றதில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அந்த 3 கி.மீ. போர்ட்டை கடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை கண்டிப்பாக அந்த ஊரில் என்ன தான் இருக்கிறது? என்று பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

போன வேலையை முடித்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எங்கே என்று கேட்டவர்களிடம், கொற்கை என்றால், அங்கு என்ன இருக்கிறது? என்பது பதில் கேள்வியாக இருந்தது. ”பழைய காலத்து ஊராச்சே, என்ன இருக்கிறது என்று பார்க்க போகிறேன்” என்றால், “அங்கு ஒன்றும் இல்லை” என்பது பதிலாக இருந்தது. இருந்தாலும், போகாமல் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அப்படி என்ன தான் அங்கு ஒன்றும் இல்லை என்று பார்க்க கிளம்பிவிட்டேன்!

---

கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எப்படி துறைமுகமாக இருந்தது என்பது என் பழைய ஆச்சரியம். இணையத்தில், தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களை வாசித்தப்போது சிறிது புரிந்தது. எவ்வளவு மாற்றங்கள்? இன்னும், எவ்வளவு மாறுமோ?

முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.

---



போகும் வழி, வாழைத் தோட்டங்களால் நிறைந்திருந்தது. மண் வாசம் அருமையாக இருந்தது. கொற்கைக்குள் வந்துவிட்டேன். வழக்கமான கிராமமாகத்தான் இருந்தது.

ஒரு பெரியவர் அருகே சென்று நிறுத்தி விசாரித்தேன். அவர் சொன்னது,

“பழைய காலத்து அம்பு, வில், பானை பொருட்களை காட்சிக்கு வைத்து காட்ட ஒரு இடம் இருந்தது. ஒரு ஆபிசரும் இருந்தார். ஆனா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, யாரும் இங்கு வருவதில்லை என்பதால் அது திருநெல்வேலிக்கு இடம் மாறியது. இப்ப, இங்க எதுவும் கிடையாது. கொஞ்ச தூரம் போனா, ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான்.”

அந்த கோவிலுக்கு வண்டியை விட்டேன். சின்ன கிராமத்து சாலை. இடது பக்கம், வழக்கம் போல் வாழைத்தோட்டம். வலது பக்கம், நீர் இல்லாத குளம் போல் இருந்தது.



சிறிது தூரத்தில், வாழைத்தோட்டத்துக்கிடையே, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்வாறு, ஒரு சிறிய வளைவு இருந்தது. அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதியிருந்தது. இதிலேயே ‘பழமையான’ என்று எழுதியிருந்தாலும், இந்த வளைவே ரொம்ப பழமையாக இருந்தது! வளைவின் இரு பக்கமும் பாண்டிய ராஜ்ஜியத்தின் சின்னமான மீன் இருந்தது.


உள்ளே இருந்த கோவில், மதிய நேரமென்பதால் சாத்தியிருந்தது. சிறிய கோவில் தான்.


வாசல் முன்பு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள், மதிய உணவருந்திக்கொண்டிருந்தனர். பிரதான வாசல் மூடியிருந்தாலும், வலது பக்கம் கோவில் வளாகத்திற்குள் நுழைய ஒரு வழி இருந்தது. இதை முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள்.


ஏரியாவே அமைதி. கோவிலுக்குள் இன்னமும் அமைதி. பசுமை சூழ்ந்த ஒரு கோவிலுக்குள், அமைதியான சுழலில் நான் மட்டும். புராதன கோவில் என்று சொல்ல முடியாது. சிறியதாக இருந்ததை சுற்றி எழுப்பியிருக்கலாம். முன்பக்க சுவர் முழுக்க, கல்வெட்டுக்கள்.


பின்புறம் ஒரு பாதி மரம் இருந்தது. கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும், பதில் சொல்ல ஆளில்லாததால், கேள்விகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.





---


திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு பாட்டி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். அவர் குளம் போல் இருந்ததை காட்டி, இது தான் பாண்டிய காலத்தில் தோணித்துறையாக இருந்ததாக நம்பிக்கை என்றார்.


அதனுள் ஒரு கோவில் இருந்தது. அம்மன் கோவில். பாட்டி இந்த கோவிலும் பழமையானது என்றார். ஆனால், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நான் போன நேரம், இந்த கோவிலும் பூட்டி கிடந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.


கோவில். கோவிலைச் சுற்றி தண்ணீர் இல்லாத குளம். ஒரு பெரிய மரம். மரத்தடியில் பெண்கள் கூட்டம் ஒன்று உட்கார்ந்து ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள். மரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த ஊரில் 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு வன்னி மரம் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், அதை நான் பார்க்க, கேட்க மறந்துவிட்டேன். ஒருவேளை, பார்த்திருக்கலாம். வன்னி மரம் எதுவென்று தெரியாததால், உறுதி செய்ய முடியவில்லை.

---

”என்னடா, கொற்கை பார்த்தியா? என்ன இருந்துச்சு?”

“முன்ன, ஒரு ஆபிசரும் பழைய காலத்து பொருட்களும் வச்சிருந்தாங்களாம். இப்ப, யாரும் வருறது இல்லன்னு, திருநெல்வேலிக்கு கொண்டு போயிட்டாங்களாம்.”

“ஆமா! இப்ப யாரு அதையெல்லாம் பாக்குறா? தமன்னா வந்திருக்கா’ன்னு சொல்லு, எங்கிருந்துனாலும் ஓடி வருவானுங்க!”

---

செல்லும் வழி - தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறினால், முக்காணியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் இருக்கும். மினி பஸ் இருக்கும் என நினைக்கிறேன். முக்காணி வழியில் ஏரல் செல்லும் பஸ்ஸில் ஏறினால், உமரிக்காடு என்னும் ஊரில் இறங்கி செல்லலாம்.
********************** 
திருடன் கையில் சாவி!!!!!!!!!!!
முக்கியமான தகவல்
இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.


http://www.saravanakumaran.com/
இத அவரே தான் சொல்லியிருக்காரு
***
எனது மறுமொழியும் அவரின் பதிலும் 

சு.மருதா said...

மூவேந்தர்களின் துறைமுக நகரங்களில் தொண்டி'ய அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததால் பார்த்துவிட்டேன்.உம்மால் இன்று யாம் எமது கொற்கையை கண்ணுற்றோம் மிக்க நன்றி,அப்பிடியே கொஞ்சம் முசிறி பக்கம் போன ஒரு பதிவு எழுதிருங்க!!!!!

சரவணகுமரன் said...

நன்றி மருதா. முசிறி பற்றிய தகவலுக்கு நன்றி.
குடிலுக்கு சொந்தக்காரருக்கு நன்றி!!!!!




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக